டிக் டாக் சமூக ஊடக தளத்தின் அல்காரிதம், பதின்ம வயதினரை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் முறையில் அமைந்துள்ளதாக, ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
தற்கொலை சார்ந்த பதிவுகள், தவறான உணவு பழக்கங்களை ஆதரித்தல், எடை குறைப்பு மற்றும் உருவ அமைப்பு சார்ந்த பதிவுகள் ஆகியவை டிக் டாக் அல்காரிதமில் முன்னணியில் உள்ளன. இதனால், எண்ணற்ற பதின்ம வயது குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஃபேர் பிளே ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த ஆராய்ச்சி நிறுவனம், பல கணக்குகளை டிக் டாக்கில் தொடங்கி, அதன் அல்காரிதம் செயல்படும் முறையை ஆய்வு செய்தது. அதன்படி, பதின்ம வயதினரின் கணக்குகளுக்கு, அதிக எண்ணிக்கையிலான பகிர்வுகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, உடல் பராமரிப்பு, அழகிய உடல் தோற்றம், முன்னணி பிரபலங்களின் பதிவுகள் போன்றவை கொடுக்கப்படுகின்றன. மேலும், எடை குறைப்பு போன்ற வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட கணக்குகளுக்கு தவறான உணவுகள் குறித்த பல பகிர்வுகள் அனுப்பப்படுகின்றன. அத்துடன், சவரம் செய்யும் கத்தி உட்பட சில ஆயுதங்களைக் கொண்டு, தற்கொலைக்கு முயலுதல் போன்ற காணொளிகள் குழந்தைகள் மத்தியில் அதிகமாக பகிரப்படுகின்றன. எனவே, இந்த சீன சமூக ஊடகச் செயலி ஆபத்தானது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.