திருச்சி ஸ்ரீரங்கம் அடையவளஞ்சான் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் இன்று திடீர் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.திருச்சியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட 84 கடைகள் மற்றும் இதர சுமார் 200க்கும் மேற்பட்ட காய்கறி, பழங்கள், இலை, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் ஸ்ரீரங்க மக்களின் முக்கியமான மார்க்கெட்டாக இருந்து வருகிறது. இங்கு சமீப காலமாக ஆறு இடங்களில் வார சந்தைகள் செயல்பட தொடங்கின. இதனால் அந்த பகுதிகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தனர். இதனால் ஸ்ரீரங்கம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வார சந்தைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என திடீர் கடையடைப்பு போராட்டத்தில் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பொதுமக்கள், சிறு வியாபாரிகள் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் கூறும்பொழுது மாநகராட்சிக்கு வாடகை மற்றும் வரி செலுத்தி வியாபாரம் செய்து வரும் நிலையில் வார சந்தைகள் இயங்கினால் கடுமையான பாதிப்பு ஏற்படும். மாநகரில் தில்லைநகர் உட்பட்ட பல்வேறு இடங்களில் வார சந்தைகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதை போன்று ஸ்ரீரங்கம் பகுதியிலும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடை அடைப்பு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.