இந்தியர்களுக்கு கட்டணமில்லா விசா நடைமுறை நீட்டிக்கப்படுவதாக இலங்கை தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாட்டினருக்கும் கட்டணமில்லா விசா நடைமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை, இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கட்டணமில்லா விசா நீட்டிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு 50 டாலர் கட்டணத்தில் 30 நாட்கள் வரை தங்கி இருக்கும் நுழைவு விசா வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு, மேற்குறிப்பிட்ட 7 நாடுகளுக்கு கட்டணம் இல்லாமல் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை அப்படியே தொடர்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, கொழும்பு விமான நிலையத்தில் வெளிநாட்டு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஆன் அரைவல் விசா நடைமுறை கட்டணங்கள் அதிகரித்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிபர் அலுவலகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.