தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
தமிழகத்தில் தக்காளி விலை திடீரென உயர்ந்து, ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில், தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும் கடந்த வாரம் முதல் தக்காளி விலை அதிகரித்துள்ளது.
இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் 62 பண்ணை பசுமை நுகர்வோர் பசுமை கடைகள், 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்தபட்சமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனையை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.














