இந்தியாவின் வணிகப் பற்றாக்குறை கடந்த ஜனவரி மாதத்தில் 2,299 கோடி டாலராக அதிகரித்துள்ளதாக மத்திய வாணிபத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் ஏற்றுமதி 3,732 கோடி டாலராக இருந்து, முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.38% குறைந்துள்ளது. அதே நேரத்தில், இறக்குமதி 10.28% அதிகரித்து 5,942 கோடி டாலராக உயர்ந்தது. இதன் காரணமாக, வணிகப் பற்றாக்குறை டிசம்பர் மாதத்தின் 2,194 கோடி டாலரிலிருந்து உயர்ந்துள்ளது. மின்னணுவியல், மருந்துகள், அரிசி, நவரத்தினங்கள், ஆபரணங்கள் போன்ற துறைகள் வளர்ச்சி கண்டுள்ளன.
தங்க இறக்குமதி 190 கோடி டாலரிலிருந்து 268 கோடி டாலராக உயர்ந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் இறக்குமதி 1,656 கோடி டாலரிலிருந்து 1,343 கோடி டாலராக குறைந்துள்ளது. ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் ஏற்றுமதி 1.39% வளர்ச்சி கண்டதாகவும், இறக்குமதி 7.43% அதிகரித்து 60,190 கோடி டாலராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2025-26 நிதியாண்டிற்குள் இந்தியாவின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 80,000 கோடி டாலரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.