ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மெரினா காமராஜர் சாலை, ராஜாஜி சாலை ஆகியவற்றில் நாளை இரவு 7 மணி முதல் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில புத்தாண்டு கொண்டாட நாளை இரவு மெரினா கடற்கரை, எலியட் கடற்கரை மற்றும் பிற பொழுதுபோக்கு தலங்களில் ஏராளமான பொதுமக்கள் கூடுவார்கள். எனவே, சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில், ‘‘உயிரிழப்பு இல்லா புத்தாண்டிற்கு முன்னாள்’’ என்ற நோக்கத்துடன் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக சென்னை முழுவதும் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புத்தாண்டை முன்னிட்டு வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் போன்றவற்றை கண்டறிந்து தொழில்நுட்ப முறையில் ஏஎன்பிஆர் கேமரா மூலமாக தானாகவே வழக்குகள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.