ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் காரணமாக ஏற்பட்ட விண்வெளி நெரிசலால் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் இன்று இரவு 10 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இந்த ஏவுகலம் இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் வகையில், ஸ்பேடெக்ஸ் (SpaDeX) எனும் ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பத்தை செயல்படுத்துகிறது.
விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைத்து பிரிக்கும் சிக்கலான ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பத்தை, இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் சாதித்துள்ளன. இந்தியா இந்த பட்டியலில் நான்காவதாக இணைந்து வரலாறு படைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்று இரவு ஏவப்படும் ராக்கெட்டின் நான்காவது கட்டத்தை சுற்றுப்பாதை ஆய்வகமாக மாற்றி, 24 வகையான அறிவியல் சோதனைகள் நடத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதில் நேரடி உயிரியல் சோதனைகள் முதல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத புதிய வகை ராக்கெட் எரிபொருள் சோதனைகள் வரை அடங்கும். இந்த சோதனைகள் எதிர்காலத்தில் சந்திரயான்-4 மற்றும் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் பாரதிய அந்தரிக்ஷா ஆகிய திட்டங்களுக்கு வலு சேர்க்கும்.