தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021 மே7-ம் தேதி பொறுப்பேற்றது. கடந்த ஆண்டில் அமைச்சரவையில் முதன்முதலாக மாற்றம் செய்யப்பட்டது. கடந்த சில வாரங்களாகவே அமைச்சரவை மாற்றம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் முதல்வர் பரிந்துரையின்பேரில் அமைச்சரவையில் இருந்து நாசர் விடுவிக்கப்படுவதாகவும், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான டிஆர்பி ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுவதாகவும் ஆளுநர் மாளிகையில் இருந்து கடந்த 9-ம் தேதி அறிவிப்பு வெளியானது.
இதன்படி ஆளுநர் மாளிகையில் இன்று காலை10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், புதிய அமைச்சராக டிஆர்பி ராஜாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.