தமிழகத்திற்கு வட மாநிலங்களில் இருந்து வெங்காயம், பருப்பு, துணிவகைகள், மளிகை பொருட்கள் உட்பட பல்வேறு பொருள்கள் கொண்டுவரப்படுகின்றன. இதே போல் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு ஜவ்வரிசி, கல் மாவு, துணி வகைகள், இரும்பு பொருட்கள் ஆகியவை கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது தமிழகத்தில் 6 லட்சம் லாரிகள், 25 லட்சம் இலகு ரக வாகனங்கள் உள்ளன. இதில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி வட மாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது லாரி உள்பட இலகு ரக வாகனங்களுக்கு காலாண்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இவை ஆன்லைன் மூலம் வரி விதிக்கப்படுகிறது.
டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு, காப்பீட்டு கட்டணம் உயர்வு ஆகியவற்றில் பல காரணங்களால் தொழில் பாதிப்படைந்த நிலையில் தற்போது காலாண்டு வரி உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் மற்றும் இலகு ரக வாகன உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதில் காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வழக்கு பதிவை ரத்து செய்ய வேண்டும், அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.














