அமெரிக்கா விதித்த கூடுதல் 25% வரியால், தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் கடல் உணவு ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து வருகிறார். அதன் அடிப்படையில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி கடந்த 7ம் தேதி முதல் அமலானது. இதனுடன், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்கியதால் இந்தியாவுக்கு மீண்டும் 25 சதவீத அபராத வரி விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டதால், இந்திய ஏற்றுமதி துறைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. குறிப்பாக ஜவுளி, ஆடைகள், எந்திரங்கள் மற்றும் கடல் உணவுகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.
அமெரிக்கா இறக்குமதி செய்யும் கடல் உணவுகளில் 26.5% இந்தியாவின் பங்காகும். இதில் தமிழ்நாட்டிலிருந்து இறால், கணவாய், பனாமின் போன்றவை முக்கியமாக அனுப்பப்படுகின்றன. தூத்துக்குடி மட்டும் 15 கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களின் மையமாக விளங்குகிறது. கடந்த ஆண்டு இந்தியா ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான கடல் உணவுகளை ஏற்றுமதி செய்தது. அதில் 40% இறால் மட்டுமே. ஆனால் புதிய வரி காரணமாக இந்த ஆண்டு ஏற்றுமதி ரூ.36 ஆயிரம் கோடியாக சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டு ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு கடல் உணவுகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது உற்பத்தி 50% குறைக்கப்பட்டு வருவதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.














