கிரீன்வேஸ் சாலை-அடையாறு இடையே ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிரீன்வேஸ் சாலை-அடையாறு இடையே அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணிக்காக எந்திரம் பொருத்தும் பணி நிறைவடைந்தது. 15-ந் தேதிக்குள் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் பாதை சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கப்பட்டு வருகின்றன. 2-வது கட்டமாக ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த திட்டத்தில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 48 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் 128 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.














