இஸ்ரேலுக்கான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் துருக்கி அரசு நிறுத்திவிட்டது.
காசா போரில் இதுவரை 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக அழிக்கும் வரை ஓயப்போவதில்லை என்று இஸ்ரேல் கூறியுள்ளது. தற்போது அதன் கடைசி இலக்கான ரபா நகரில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. ரபா நகரில் தாக்குதல் நடத்தினால் பேரழிவு ஏற்படும் என்று உலக நாடுகள் இஸ்ரேலை எச்சரிக்கின்றன. இந்நிலையில், இஸ்ரேலுடன் வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது. கடந்த மாதம் இஸ்ரேலுக்கான ஏற்றுமதியில் சில கட்டுப்பாடுகளை துருக்கி அரசு விதித்தது. தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டது.
இது தொடர்பாக துருக்கி வர்த்தக அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரேலுக்கான 54 தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதியை ஏப்ரல் மாதம் துருக்கி அரசு நிறுத்தி வைத்தது. ஏனென்றால் காசாவில் இஸ்ரேலால் அழிவுகள் தொடர்கின்றன. போர் நிறுத்த முயற்சிகளை இஸ்ரேல் அரசு புறக்கணிப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு செல்ல வேண்டிய மனிதாபிமான உதவிகளையும் தடுத்து வருகிறது. இதையடுத்து இஸ்ரேலுடன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டன. இஸ்ரேல் அரசு காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை தடையின்றி அனுப்ப அனுமதி வழங்கினால் மட்டுமே இந்த தடை நீக்கப்படும். அதுவரை இந்த வர்த்தக நிறுத்த நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தும் என்று கூறியுள்ளது.