தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி விமான நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தை சமாளிக்கவும், சிறந்த சேவைகளை வழங்கவும், இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மூலம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி விமானநிலையத்தில் ஏ-321 ரக விமானங்களை இயக்குவதற்கு ஏற்ற வகையில், ஓடு பாதையை விரிவுபடுத்துதல், புதிய ஓடுபாதை அமைத்தல், புதிய முனையக் கட்டடம், தொழில்நுட்ப பிரிவு, கட்டுப்பாட்டு கோபுரம், புதிய தீயணைப்பு நிலையம் உள்ளிட்டவை ரூ.381 கோடி செலவில் மேம்படுத்தப்படுகின்றன.
13,500 சதுர மீட்டர் பரப்பில் கட்டப்படும் புதிய முனையம் நெரிசல் மிகுந்த நேரத்தில் 6,00 பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். 2 மேம்பாலங்கள், கார் நிறுத்தும் வசதிகள், புதிய அணுகு சாலை ஆகியவற்றுடன் அனைத்து நவீன வசதிகள், பயணிகளுக்கான வசதிகளை கொண்டதாக இந்தக் கட்டடம் இருக்கும்.
தமிழகத்தின் தென்பகுதியில் மதுரைக்கு அப்பால் உள்ள ஒரே விமான நிலையமாக தூத்துக்குடி விமானநிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தை மேம்படுத்துவது, அருகே உள்ள திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற அண்டை மாவட்டங்களின் வர்த்தகத்தையும், சுற்றுலாவையும் மேம்படுத்தும். இந்த விமான நிலையத்தை மேம்படுத்துதல் மற்றும் விரிவாக்கும் பணி 2023 டிசம்பரில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.














