தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ரயில் சேவை கடந்த மூன்று நாட்களாக துண்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிக கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கெடுத்து தண்டவாளம் சேதம் அடைந்தது. மேலும் கற்கள் மற்றும் மணல் அடித்து செல்லப்பட்டதால் தண்டவாளம் தொங்கியது. இதனால் தூத்துக்குடி - மீளவட்டான் இடையே ரயில் சேவை கடந்த மூன்று நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது மழைநீர் வடிந்ததை தொடர்ந்து சீரமைக்கும் பணி விரைந்து நடைபெற்றது.
மேலும் மதுரை டிவிஷனில் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று தூத்துக்குடி யார்டு பகுதி மிகவும் சேதம் அடைந்தது. இதற்கான மீட்பு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பிறகு இன்று தூத்துக்குடி ரயில் சேவை தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் சீரமைக்கப்பட்ட தண்டவாளத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. முழு ஆய்வுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் மைசூர்- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் இன்று காலையில் இயக்கப்பட்டது. மணியாச்சியிலிருந்து தூத்துக்குடி வழிதடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும் ரயில் பெட்டிகளை பராமரிக்கும் யார்டு பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எழும்பூர் - தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் மதுரை வரை மட்டுமே இயக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக ரயில் தூத்துக்குடிக்கு இயக்கப்படவில்லை என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.