உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் அந்நகரின் தொலைக்காட்சி கோபுரம் இடிந்து விழுந்தது.
இந்த சம்பவம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்படுவதாவது ரஷ்யா கார்கிவ் நகரில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்தை தகர்த்துள்ளது. இது இங்குள்ள மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் ரஷ்யா பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துள்ளது. அதோடு இந்த நகர மக்களுக்கு தகவல்கள் வந்து சேர்வதை அது தடுக்கிறது என்பதை தெளிவாக உணர முடிகிறது என்றார். சமீப காலமாக ரஷ்யப் படை கார்கிவ் நகரத்தை அடிக்கடி குறி வைத்து தாக்குகிறது. ரஷ்யாவின் எல்லையை ஒட்டி அந்த நகரம் அமைந்துள்ளது. அந்த நகரின் எரிசக்தி கட்டமைப்பை குறைக்க ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துகிறது. இதனால் இந்த நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில், தொலைக்காட்சி கோபுரமும் தகர்க்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.














