இன்றைய வர்த்தக நாளில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஒரு லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை தாண்டி வரலாறு படைத்துள்ளது. அத்துடன், டிவிஎஸ் மோட்டார் பங்கு மதிப்பு 4% வரை உயர்ந்து ஒரு வருட உச்சத்தை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் போது, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 2186 ரூபாயாக இருந்தது. காலை 11 மணி அளவில், 1.03 லட்சம் கோடி மதிப்பில் டிவிஎஸ் சந்தை மதிப்பு பதிவானது.
அண்மையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியாகின. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபத்தில் 59% உயர்வு பதிவாகி இருந்தது. கடந்த 2023 இறுதியில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம் 479 கோடி ரூபாய் ஆகும். டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை அனைத்து பிரிவுகளிலும் நல்ல முன்னேற்றத்தை பதிவு செய்ததாக காலாண்டு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதன் எதிரொலியாக, டிவிஎஸ் மோட்டார் பங்குகள் உயர்ந்து வருகின்றன.