டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வருடாந்திர அடிப்படையில், நிறுவனத்தின் நிகர லாபம் 22.1% உயர்ந்து, 352 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய் 15% உயர்ந்து, 6545 கோடியாக பதிவாகியுள்ளது. நிறுவனத்தின் EBITDA 16% உயர்ந்து, 659 கோடியாக பதிவாகி உள்ளது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு சந்திப்பு கடந்த வாரம் நடைபெற்றது. அதில், இடைக்கால டிவிடெண்ட் ஆக ஒரு பங்குக்கு 5 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 2022-23ஆம் நிதியாண்டில், 238 கோடி நிதி கிடைக்கவுள்ளது. மேலும், இதற்கான 'பே அவுட்' பிப்ரவரி 2ம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஓராண்டில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 58% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், டிவிஎஸ் நிறுவனம் 8.36 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மேலும், 2.07 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 0.43 லட்சமாகவும், மின்சார வாகனங்கள் விற்பனை 0.29 லட்சமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.