பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வ ட்விட்டர் கணக்கு, இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் தளத்தில், பாகிஸ்தான் அரசின் கணக்கு பக்கத்திற்கு சென்றால், இந்த தளம் இந்தியாவில் முடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் இது போன்ற நிகழ்வு நடப்பது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த ஜூலை மாதத்தில் பாகிஸ்தான் அரசன் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், விரைவிலேயே கணக்கிற்கான முடக்கம் நீக்கப்பட்டு, ட்விட்டர் கணக்கு இந்தியாவில் வெளியானது.
இந்திய அரசின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிராக இருக்கும் யூடியூப் சேனல்கள் மற்றும் ட்விட்டர் கணக்குகள் போன்றவற்றை இந்தியா முடக்கி வரும் போக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் 8 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்கள் இது தொடர்பாக முடக்கப்பட்டன. இந்தியாவில் இதுவரை, 100 யூட்யூப் சேனல்கள், 4 முகநூல் பக்கங்கள், 5 ட்விட்டர் கணக்குகள் 3 இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக, ட்விட்டர் தரப்பு கருத்து தெரிவித்துள்ளது. அதில், "தேசத்தின் விதிகளை மீறி, சட்ட திட்டங்களுக்கு எதிராக, ஏதாவது ட்விட்டர் கணக்கு செயல்பட்டால், அது குறித்து நீதிமன்றத்தில் முடிவெடுக்கப்படும். தேசப் பாதுகாப்பின் காரணமாக, இது போன்ற கணக்குகளை முடக்குவதற்கு நீதிமன்ற உத்தரவு இருந்தால், டிவிட்டர் நிறுவனம் அதனைச் செயல்படுத்தும்" என்று கூறியுள்ளது.