ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதிலிருந்து பல்வேறு அதிரடி முடிவுகளை அறிவித்து வந்த எலான் மஸ்க், தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் பெயரையே மாற்றி உள்ளார். நிறுவனத்தின் புதிய பெயர் ‘எக்ஸ்’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சில தினங்களுக்கு முன், எக்ஸ்.காம் என்ற புதிய தளத்தில் ட்விட்டர் இயங்கும் என எலான் மஸ்க் கூறி இருந்தார். மேலும், தனது ட்விட்டர் கணக்கின் போட்டோவை ‘எக்ஸ்’ என்பதாக மாற்றியதுடன், எக்ஸ் என்ற எழுத்தை குறிக்கும் சிறிய காணொளி ஒன்றையும் பகிர்ந்திருந்தார். அப்போதே, X என்ற பெயரில் ட்விட்டர் மாற்றப்படலாம் என கூறப்பட்டது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், இன்று, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்காரினோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ட்விட்டர், எக்ஸ் என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது, எலான் மஸ்கின் சகாப்தத்தை குறிப்பதாக அமைந்துள்ளது. எலான் மஸ்க், தனது பல்வேறு நிறுவனங்கள் மற்றும் முன்னெடுப்புகளுக்கு எக்ஸ் என்று பெயரிட்டுள்ளார். குறிப்பாக, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ்.ஏஐ கார்ப் ஆகியவை, அவரது விண்வெளி மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த முன்னெடுப்பு நிறுவனங்களின் பெயர்களாகும். மேலும், தனது டெஸ்லா கார் மாடலின் பெயர் கூட ‘எக்ஸ்’ என வைத்துள்ளார். இதன் மூலம், ட்விட்டர் நிறுவனம் முழுமையான எலான் மஸ்க் நிறுவனமாக மாறியுள்ளது என கூறப்படுகிறது.