ட்விட்டர் நிறுவனத்தில் கடந்த ஆண்டு பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தற்போது புதிய சுற்று பணி நீக்க அறிவிப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறை, விற்பனை பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் நீக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த வாரத்தில், விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றிய ஊழியர்களுக்கு, ‘பிங்க் ஸ்லிப்’ வழங்கப்பட்டதாக தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, ட்விட்டர் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் 800 பேர் பணியாற்றி வந்ததாக சொல்லப்படுகிறது. எனினும், இதில் எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், அதில் இந்தியாவைச் சேர்ந்த எத்தனை பேர் நீக்கப்படலாம் என்பது குறித்த தகவலும் வெளியாகவில்லை. ஏற்கனவே, கடந்த வருடத்தில், 200 இந்திய ஊழியர்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பணி நீக்க நடவடிக்கை, டிவிட்டரின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாகச் சொல்லப்படுகிறது.














