ட்விட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக, இந்தியாவின் ‘கூ’ சமூக செயலி இயங்கி வருகிறது. தற்போது, கூ செயலியுடன் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம், பயனர்கள் எளிமையான முறையில் பதிவுகளை உருவாக்கி பதிவிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கூ’ செயலி பயனர்களுக்கு, செயலியில் இணைக்கப்பட்டுள்ள சாட் ஜிபிடி தொழில்நுட்பம், பதிவுகளை இடுவதற்கு உதவிகள் செய்யும். மேலும், என்ன பதிவிடுவது? என்பது குறித்த யோசனைகளையும் வழங்கும். பொதுவாக, பயனர்களின் உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் நடப்பு உலக நிகழ்வுகள் குறித்த தகவல்களைக் கூறும். - இவ்வாறு, ‘கூ’ செயலியின் இணை நிறுவனர் மயாங்க் பிடவட்கா தெரிவித்துள்ளார். மேலும், கூ செயலியில் உள்ள பதிவு, சாட் ஜிபிடி துணையுடன் இயற்றப்பட்டதா என்பதை அறிவிக்கும் லேபிள் விரைவில் புகுத்தப்படும் என்று கூறினார்.
ஏற்கனவே, எலான் மஸ்கின் அதிரடி நடவடிக்கைகளால், பலர் டிவிட்டரை விட்டு வெளியேறி, கூ உள்ளிட்ட பிற சமூக தளங்களுக்கு மாறி உள்ளனர். இந்நிலையில், கூ நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, ட்விட்டருக்கு கடும் சவாலாக அமைந்துள்ளதாக பேசப்படுகிறது.