ட்விட்டர் தளத்தில், ட்விட்டர் ப்ளூ சேவை அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், பெரும்பாலான சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள் ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அண்மையில், ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்கள் அல்லாத பயனர்களுக்கு, நாள் ஒன்றுக்கு எத்தனை ட்விட்டர் பதிவுகளை பார்க்க முடியும் என்பதற்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தற்போது, TweetDeck அம்சம் இனிமேல் ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அம்சத்தை பயன்படுத்த விரும்பும் பயனர்கள், அடுத்த 30 நாட்களுக்குள் ட்விட்டர் ப்ளூ கணக்குகளைப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊடகங்கள் போன்றவை இந்த TweetDeck சேவையை பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றன. இந்த அம்சத்தின் மூலம், தங்கள் பதிவுகளுக்கான வரவேற்பு, வாசகர்களின் தெரிவுகள் போன்ற ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். எனவே, இது நிறுவனங்களால் மிகவும் பயன்படுத்தப்படும் அம்சமாகும். இந்நிலையில், ட்விட்டரின் அறிவிப்பு மூலம், அனைத்து நிறுவனங்களும் சரிபார்க்கப்பட்ட நிறுவனங்களாக மாறும் நிலை உருவாகியுள்ளது. ஆனால், அதே வேளையில், பல்வேறு நிறுவனங்கள், ட்விட்டருக்கு மாற்றாக பிற சமூக வலைதளங்களுக்கு மாறி வருகின்றனர் என்பது கவனத்திற்குரியது.