ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் செய்தி வெளியானது. அந்த செய்தியின் படி, ட்விட்டர் நிறுவனம் 75% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டது. மேலும், எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதன் பின்னர் இந்த பணி நீக்க நடவடிக்கை செயல்படுத்தப்படும் என்று அந்த செய்தி தெரிவித்திருந்தது.
மேலும், அடுத்த வருட இறுதிக்குள், சுமார் 800 மில்லியன் டாலர்கள் அளவில் நிறுவனத்தின் சம்பள செலவீனத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவித்திருந்தது. இது குறித்து ட்விட்டர் நிறுவனம் உடனடியாக பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், நிறுவனத்தின் மனித வளத்துறை அதிகாரி ஒருவர், “ஒட்டுமொத்தமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் திட்டம் இல்லை. ஆனால், சிறிய அளவில் ஊழியர்களை வெளியேற்றவும், உள்கட்டமைப்பு செலவினங்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. எலான் மஸ்க் நிறுவனத்தை வாங்குவதாக தெரிவிப்பதற்கு முன்னரே இவை திட்டமிடப்பட்டிருந்தது” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த செய்தியை பொய்யாக்கும் விதமாக, ட்விட்டர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் செய்தியை அனுப்பியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சீன் எட்ஜெட் இந்த மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். அதன்படி, நிறுவனத்தின் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை கடந்த மே மாதத்தில் எலான் மஸ்க் வாங்க முன் வந்ததும் பின்னர் அதிலிருந்து பின் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, பல கட்ட சட்ட போராட்டங்களுக்கு பின்னர், ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்த உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.














