புதிய முறைப்படி தட்டச்சு தேர்வை நவம்பர் 13க்குள் நடத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தட்டச்சு தேர்வு இளநிலை தேர்வில், முதல் தாள் வேகத்தின் அடிப்படையிலும், இரண்டாவது தாள் கடிதம் மற்றும் அறிக்கை அடிப்படையிலும் நடக்கும். ஒரே நாளில் இருவேளைகளில் இத்தேர்வு நடக்கும். முதுநிலை தேர்வும் இரண்டு தாள்களாக நடக்கும். இந்நிலையில், வழக்கமான நடைமுறை மாற்றப்பட்டு, இரண்டாவது தாளை முதலாவதாகவும், முதல் தாளை இரண்டாவதாகவும் மாற்றப்பட்டது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தட்டச்சு தேர்வை பழைய நடைமுறைப்படி நடத்த உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை நேற்று ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நடந்தது. அப்போது நீதிபதிகள், புதிய முறையில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே, புதிய முறைப்படியான தேர்வை நவம்பர் 13க்குள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 16க்கு தள்ளிவைத்தனர்.














