ஐ நா பாதுகாப்பு அவையில் ஒவ்வொரு ஆண்டும் 5 நாடுகள் தற்காலிக உறுப்பு நாடுகளாக தேர்ந்தெடுக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு புதிய உறுப்பு நாடுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட, ஜப்பான், மால்டா, மொசாம்பிக், ஈக்வடார், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டன. இந்த நாடுகளில் மொசாம்பிக் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் முதல் முறையாக ஐ நா பாதுகாப்பு அவையில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஐ நா சபையில் தங்கள் நாட்டின் கொடியை ஏற்றியது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமைந்ததாக அந்நாட்டின் தூதர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 5 நாடுகள், ஐ நா பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. தற்காலிக உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐ நா பாதுகாப்பு அவையில் தற்காலிக உறுப்பு நாடாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்த இந்தியாவின் பதவிக்காலம் டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது.














