விண்ணில் உள்ள விண்கற்களை ஆய்வு செய்வதற்கான புதிய திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. அதன்படி, சூரிய குடும்பத்தில் முக்கியமாக அமைந்துள்ள ‘விண்கற்கள் பெல்ட்’ நோக்கி விண்கலம் ஒன்றை அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 2020 ஆம் ஆண்டு, செவ்வாய் கிரகத்துக்கு ‘ஹோப்’ என்ற விண்கலத்தை அமீரகம் அனுப்பியது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது, அடுத்த விண்கல திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2028 ஆம் ஆண்டு, இந்த விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “முதலில், இந்த விண்கலம், வெள்ளி கிரகத்தை நோக்கி அனுப்பப்படும். வெள்ளி கிரகத்தின் புவி ஈர்ப்பு விசையால் உந்தப்பட்டு, மிகவும் எளிதாக பூமி மற்றும் செவ்வாய் கிரகத்தை தாண்டி, விண்கற்கள் பெல்ட்டை நோக்கி விண்கலம் பயணிக்கும். கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் வரை அருகில் சென்று விண்கற்களை ஆய்வு செய்யும். குறிப்பாக, 7 விண்கற்கள் ஆய்வு செய்யப் படவுள்ளன. அக்டோபர் 2034 ஆம் ஆண்டு, இறுதி விண்கல்லான Justitia நோக்கி இந்த விண்கலம் செல்லும்” என கூறப்பட்டுள்ளது.