இந்தியாவின் 2வது பெரிய தேயிலை இறக்குமதியாளராக ஐக்கிய அரபு அமீரகம் உருவெடுத்துள்ளதாக தேயிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில், ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையில், 28.58 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை இந்தியாவிலிருந்து அமீரகம் இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தின் இறக்குமதி அளவைவிட 159% உயர்வாகும்.
இந்தியாவின் முதன்மை தேயிலை இறக்குமதியாளராக காமன்வெல்த் ஆப் இண்டிபெண்டன்ட் ஸ்டேட்ஸ் (சிஐஎஸ்) உள்ளது. சிஐஎஸ் கூட்டமைப்பு நாடுகள், 2022ம் ஆண்டில், 38.06 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை இதுவரை இறக்குமதி செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டின் சிஐஎஸ் இறக்குமதி அளவைவிட 33.34 மில்லியன் கிலோ கிராம் கூடுதலாகும்.
பொதுவாகவே, நடப்பு ஆண்டில், இந்திய தேயிலை ஏற்றுமதி உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதம் வரையில், 165.58 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டில்,142.55 மில்லியன் கிலோ கிராமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.