உபர் நிறுவனம், ஓபன் ஏஐ நிறுவனத்தின் GPT-4 தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய AI உதவியாளரை அறிமுகம் செய்துள்ளது. லண்டனில் நடந்த Go-Get Zero நிகழ்வில் இந்த புதிய AI உதவியாளர் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த AI உதவியாளர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் அறிமுகமாகி, பின்னர் உலகளவில் விரிவாக்கப்படும். ஓட்டுநர்களை மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கு உதவும் வகையில், இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய AI உதவியாளர், ஒவ்வொரு நகரத்திற்கும் ஏற்ப மின்சார வாகனங்களுக்கான அரசாங்க ஊக்கத்தொகைகள் மற்றும் பிற சலுகைகள் குறித்த தகவல்களை ஓட்டுநர்களுக்கு வழங்கும். மேலும், மின்சார வாகனங்களைப் பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து, ஓட்டுநர்கள் மின்சார வாகனங்களை எளிதாகத் தேர்வு செய்ய உதவும். உபர் நிறுவனம், 2040 ஆம் ஆண்டுக்குள் தனது அனைத்து ஓட்டுநர்களையும் மின்சார வாகனங்களுக்கு மாற்றும் இலக்கை நிர்ணயித்துள்ளது. இதற்காக, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மட்டும் மாதந்தோறும் 180,000 ஓட்டுநர்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கு உதவும் வகையில் 800 மில்லியன் டாலர்களை செலவிட உள்ளது. மேலும், Lotus Eletre மற்றும் Rivian R1 போன்ற மின்சார வாகனங்களை பயனர்கள் நேரடியாக வந்து சோதித்துப் பார்க்கும் வகையில் EV பாப்-அப் நிகழ்ச்சிகளையும் உபர் நிறுவனம் நடத்த உள்ளது.