இங்கிலாந்தில் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மையம் விரைவில் தொடங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.அறிவியல் வளர்ச்சி காரணமாக டிஜிட்டல் கொள்ளை, சைபர் தாக்குதல், ராணுவ ரகசியங்கள் திருடப்படுவது போன்ற சம்பவங்கள் உலக அளவில் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் சைபர் பாதுகாப்புக்கு புதிய யுக்திகளை கையாண்டு வருகிறது. இதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை அனைத்து நாடுகளும் பயன்படுத்துகின்றன. தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் ஹேக்கர்கள் கொண்ட குழுவை பல நாடுகள் அமைத்து வருகிறது. இவர்கள் சைபர் ஊடுருவலை தடுத்து நிறுத்துவர். இப்பொழுது உலக நாடுகளின் கவனம் இதனை நோக்கியே உள்ளது. அந்த வகையில் லண்டனில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சி மாநாடு நடக்க இருக்கிறது. இதில் உலக நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டை இங்கிலாந்து பிரதமர் ஏற்பாடு செய்துள்ளார். இதற்கிடையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை சோதனை செய்ய செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மையத்தை விரைவில் இங்கிலாந்தில் நிறுவ உள்ளதாக பிரதமர் ரிஷி அறிவித்துள்ளார். இதன் மூலம் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டு எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஆபத்துகளை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.