ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா 6-வது முறையாக தாக்குதல் நடத்தியது.
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் வணிக கப்பல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை அமெரிக்கா எச்சரித்த போதும் அவர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்கா, இங்கிலாந்து ராணுவத்துடன் இணைந்து ஏமனை தாக்கி வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு ஆறாவது முறையாக ஏமனில் உள்ள ஹவுதி நிலைகள் மீது அமெரிக்கா இங்கிலாந்து உதவியுடன் தாக்குதல் நடத்தியது.
ஏவுகணைகள், லான்ச்சர்கள், ட்ரோன்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருக்கும் ஹவுதி நிலைகள் மீது அமெரிக்க போர்க்கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா நாடுகள் உளவு மற்றும் கண்காணிப்பு பணி ஆகியவற்றில் ஆதரவளித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கடலில் எளிதான வணிகப் போக்குவரத்து நடைபெறுவதற்காகவே அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தி வருவதாக கூறுகிறது. செங்கடல் பிரச்சனையால் உலக அளவில் வணிகம் பாதிக்கப்படுகிறது. தற்போது சீன ஏற்றுமதியாளர்கள் தங்கள் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.