கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, உக்ரைன் ரஷ்யா போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் 500 உக்ரைன் நாட்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டின் அதிபர் விலோதிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு ரஷ்யாவின் வெறுப்பு நடவடிக்கைகளே காரணம் என தெரிவித்துள்ளார். அத்துடன், “உக்ரைன் குழந்தைகள் அனைவரும் ரஷ்யாவின் பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து விடுபட வேண்டும். உக்ரைன் மக்கள் பயங்கரவாத சோகத்திலிருந்து வெளிவர வேண்டும். இதுவரையில், பல அறிஞர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரை இழந்திருக்கிறோம். எனவே, இந்த போரை எதிர்த்து நின்று வெல்ல வேண்டும்” என கூறியுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரில், முதல் முறையாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது கடந்த வாரம் உக்ரைன் தாக்குதல் நடத்தியது. அதே வேளையில், ரஷ்யாவும் தொடர்ந்து உக்ரைன் மீது தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. போரில் முன்னேறுவதற்கான நடவடிக்கைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. போர் நிறுத்தம் குறித்த முயற்சிகள் பெரிதாக முன்னெடுக்கப்படவில்லை.