உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்யா சட்டவிரோதமாக இணைத்ததைக் கண்டிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நா பொதுச் சபையில் இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ரஷ்யா கோரிக்கையை விடுத்தது. ஆனால் இந்தியா உட்பட பல நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களித்ததால் ஐ.நா சபை ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்தது.
193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா சபையில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. இதன் மூலம் டொனெட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க் மற்றும் ஜபோரிஜியா பகுதிகளை ரஷ்யா சட்டவிரோதமாக இணைக்க முயற்சிப்பதை கண்டிக்கும் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை நிறைவேற்ற ரகசிய வாக்கெடுப்பு மூலம் வாக்களிக்க வேண்டும் என்று ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட வாக்கெடுப்புதான் எடுக்கவேண்டும் என்று இந்தியா உட்பட 107 ஐ.நா உறுப்பு நாடுகள் ௯றியது. அதன் அடிப்படையில் ரஷ்யாவின் "சட்டவிரோத வாக்கெடுப்பு" மற்றும் "சட்டவிரோத இணைப்பு" ஆகியவற்றைக் கண்டிக்கும் வரைவுத் தீர்மானத்தின் மீது பொது வாக்கெடுப்பை நடத்துவதாக ஐ.நா முடிவு செய்தது .
இந்தமுடிவை 13 நாடுகள் மட்டுமே எதிர்த்தன. 39 நாடுகள் ஆதரவளித்தன. பொதுச் சபையானது வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக 100 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் மற்றும் முறையான வாக்கெடுப்பு நடத்துமாறு 58 நாடுகளும் பரிந்துரைத்தன. எனவே ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நடவடிக்கைகள் "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் கூறினார்.
"இப்போது உக்ரைனுக்கு ஆதரவாகப் பேசுவதற்கான நேரம் இது. நடுநிலைமை என்ற பெயரில் புறக்கணிப்பு, சமாதானம் அல்லது சமன்பாடுகளுக்கான நேரம் அல்ல. ஐ.நா. சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகள் ஆபத்தில் உள்ளன," என்று மேலும் அவர் அறிக்கையில் கூறினார்.