இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மேலும் தீவிரமடையலாம் என்று ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் உலக உணவுத் திட்ட அமைப்பு (WFB) ஆகியவை தெரிவித்துள்ளன. இந்த அமைப்புகள், செப்டம்பர் 12ஆம் தேதி வெளியிட்ட கூட்ட அறிக்கையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, "இலங்கையில் தொடர்ந்து இரு அறுவடை பருவங்கள் மோசமாக அமைந்ததால், வேளாண் உற்பத்தியில் 50% சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், அந்நியச் செலாவணி இருப்பு குறைந்ததால் உணவுப் பொருட்களின் இறக்குமதியும் குறைந்துள்ளது. இதனால், இலங்கையின் 63 லட்சம் மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. துரித நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த ஆறு மாதங்களில், இந்த நிலை மேலும் தீவிரமடையும். இலங்கையில் விவசாயத்தை நம்பியுள்ள 30% மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், இந்த நிலை சற்று குறையும்" என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் 13 வது சட்ட திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது அந்நாட்டிற்கு நன்மை தரும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு பஞ்சம் ஏற்படாமல் தீர்வு காணுவதற்கு, இந்த சட்ட திருத்தம் துணை புரியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தம், இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பதவிகளைப் பகிர்ந்து அளிப்பது குறித்ததாகும். எனவே, இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்த, இந்தியாவும் இலங்கையை வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.














