உணவே மருந்து

மருத்துவ உலகம் எவ்வளவுதான் முன்னேறினாலும், ...

மருத்துவ உலகம் எவ்வளவுதான் முன்னேறினாலும், “ஆரோக்கியமான வாழ்க்கையின் அஸ்திவாரமாக இருப்பது உணவே ஆகும்” என்பதை ஒத்துக்கொண்டுள்ளன. உதாரணத்திற்கு, ஒரு காலத்தில் நம் அன்றாட உணவில் சேர்க்கப்பட்ட மிளகு, சீரகம், வெந்தயம், மஞ்சள் போன்ற பொருட்களே, இன்றைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மருந்தாகப் பல்துறை மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. இதனைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உணர்ந்தவர்கள் தமிழர்கள் ஆவர். எனவே தான் உணவைப் பற்றியும் உணவுப் பழக்கத்தைப் பற்றியும் பல பழமொழிகள் தமிழில் காணப்படுகின்றன.

தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடியதாக இருக்கின்றது. இதற்குச் சான்றாக, திருக்குறளில் “மருந்து” என்ற அதிகாரத்தில் உள்ள 10 குறள்களில் 7 குறள்கள் “மருந்து எனப்படுவது சரியான உணவு முறையே” என்று விளக்குவதாக உள்ளன. அதிலும்,

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”

என்ற குறள் உணவே மருந்து என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. மேலும்,

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

என்ற குறள், சீரான உணவை உண்பதும், அளவிற்கு அதிகமாகாமல் மறுத்து அளவோடு உண்பதும் உயிரைக் காக்கும் என்று விளக்குகிறது.

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

என்ற குறள், முன் உண்ட உணவு சீரணமாகிவிட்டதை அறிந்து, நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்பதே சிறந்த உணவுப் பழக்கம் என்று கூறுகிறது.

இவற்றின் மூலம் நாம் உணர்வது என்னவென்றால், சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான உணவை எடுத்துக்கொண்டால், பல உடல்நல பாதிப்புகளிலிருந்து விடுபட முடியும் என்பதே ஆகும். அதோடு, நம் முன்னோர்கள், “நொறுங்கத் தின்றால் நூறு வயது” என்றும் “பசித்துப் புசி” என்றும் அனுபவ ரீதியிலானப் பழமொழிகளை உருவாக்கி, சிறந்த உணவுப் பழக்கத்தை நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றி வந்தவர்கள்.

இன்றைய வாழ்க்கைச் சூழலில் உள்ள ஓய்வின்மை, காலம் தவறிய உணவு, உணவு முறை மாற்றம் ஆகியவையே உடல்நல பாதிப்புகளுக்குக் காரணமாகின்றன. எனவே, நம் முன்னோர்களின் இயற்கையான உணவு முறையினையும் இயற்கையோடு இணைந்த பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிப்பதன் மூலம் உடல் நலத்தையும் உள நலத்தையும் பாதுகாக்க முடியும்.

ஆயிரம் ஆண்டுகளாய்த் தொன்றுதொட்டு இருந்த “உணவே மருந்து” என்ற உணவுப் பழக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாகத்தான் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இது ஒரு குறுகியகால மாற்றம் என்பதால் இதை நிவர்த்தி செய்யவும் குறுகிய காலம் போதும். அதன் அடிப்படையில் நம் முன்னோர்களின் உணவுப் பழக்கத்திற்கு அனைவரையும் இட்டுச் செல்லும் பாதையாக, சிலப் பதிவுகளை இந்தப் பகுதியில் காணலாம்.

10
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu