திரைப்பட தணிக்கை 5 வகைகளாக பிரித்து வழங்கும் ஒளிப்பதிவு சட்ட மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2021ம் ஆண்டு திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்ட முன்வரைவை ஒன்றிய அரசு வெளியிட்டது. அதன்படி, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவோ பொது அமைதியை சீர்குலைப்பதாகவோ புகார் வந்தால் திரைப்படத்தை மறு ஆய்வு செய்யுமாறு தணிக்கைக்குழு தலைவருக்கு ஒன்றிய அரசு உத்தரவிட முடியும். இந்நிலையில் திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்ட முன்வரைவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையதளங்களில் ஒளிபரப்புவதை தடுக்கும் அம்சங்களும் இந்த மசோதாவில் உள்ளன. தற்போது U, U/A, A என 3 பிரிவுகளாக வழங்கப்படும் திரைப்பட தணிக்கை சான்றிதழை U, U/A 7+, U/A 13+, U/A 16+, A என 5 வகைகளாக பிரித்து வழங்கவும் இந்த மசோதா வழி வகை செய்கிறது. வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த சட்டம் நிறைவேற உள்ளதாக ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.