இயற்கை உரங்களுக்கு 1451 கோடி மானியம் வழங்கும் பி எம் பிரணாம் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்துடன், தற்போதைய யூரியா மானிய திட்டம் 2025 ஆம் ஆண்டு வரை தொடரப்படும் என தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு 3.68 லட்சம் கோடியாக சொல்லப்பட்டுள்ளது.
பி எம் பிரணாம் என்பது, பூமித் தாய்க்கு புத்துயிர் ஊட்டல், விழிப்புணர்வு, உற்பத்தி, ஊட்டச்சத்து மற்றும் மேம்பாடு என்பதன் சுருக்கமாகும். இந்தத் திட்டத்தின் படி, ரசாயன உரங்களின் பயன்பாடு குறைக்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் மானிய சேமிப்புத் தொகையானது, இயற்கை உரங்களை ஊக்குவிக்க பயன்படுத்தப்படும். மேலும், கோவர்தன் திட்டத்தின் கீழ் உயிரி எரிவாயு ஆலைகளில் இருந்து கிடைக்கப்பெறும் இயற்கை உரங்கள், சந்தைப்படுத்தப்படும். அவற்றுக்கு 1451 கோடி மதிப்பில் மானியம் வழங்கப்படும். எனவே, ஒரு டன் உரத்திற்கு 1500 ரூபாய் மானியம் கிடைக்கும். இந்த திட்டத்திற்கான மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.