அடுத்த மாதம் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி மாற்றம் செய்யப்பட்டது. அதில் 12 அமைச்சர்கள் மாற்றப்பட்டனர். இந்நிலையில், அடுத்த மாதம் இறுதியில் ஒன்றிய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 2023ம் ஆண்டு 9 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு தேர்தல் நடக்கும் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் தரப்பட உள்ளது.
மேலும், தேர்தல் பணிகளை கவனிக்க முக்கிய தலைவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு தேர்தல் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜ சாதனை வெற்றி பெற்றது. இதற்கு பரிசாக குஜராத் நிர்வாகிகளுக்கு அமைச்சரவையில் இடம் தரப்பட இருப்பதாக கூறப்படுகிறது.