மாநில அரசுகளுக்கு வழங்கும் அரிசி, கோதுமை விற்பனையை விலைவாசி உயர்வை காரணம் காட்டி ஒன்றிய அரசு நிறுத்தி உள்ளது.
ஒன்றிய அரசின் இந்திய உணவுக்கழகம் சார்பில் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, திறந்த சந்தை விற்பனை திட்டத்தின்(ஓம்எம்எஸ்எஸ்)கீழ் ஒன்றிய அரசு வழங்கி வந்தது. இந்த திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் ஒரு குவிண்டல் அரிசியை ரூ.3400 கொடுத்து வாங்கி தங்களின் நலத்திட்டங்களுக்காக மக்களுக்கு விநியோகம் செய்து வந்தன. சமீபத்தில் இந்திய உணவுக்கழகம் மாநில அரசுகளுக்கு திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் விநியோகம் செய்து வந்த கோதுமை, அரிசியை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
கர்நாடகா அரசு ஜூலை மாதம் தேவைப்படும் அரிசிக்காக திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் 13,819 டன் அரிசி கேட்டப்போது மாநில அரசுகளுக்கான கோதுமை மற்றும் அரிசி விற்பனை நிறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் அரிசி விலை 10 சதவீதம் வரையிலும், கடந்த ஒரு மாதத்தில் 8 சதவீதம் வரையிலும் அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.