தரைகட்டுப்பாட்டு மையம் மற்றும் போர்க்கப்பல் கட்டுப்பாட்டில் தபஸ் ஆளில்லா விமானம் வெற்றிகர பரிசோதனை செய்யப்பட்டது.
ராணுவ பயன்பாட்டுக்காக தபஸ் என்ற ஆளில்லா விமானத்தை டிஆர்டிஓ உருவாக்கியது. இதை தரைக்கட்டுப்பாட்டு மையம் மற்றும் போர்க்கப்பலின் கட்டுப்பாட்டில் பறக்கவிடும் சோதனையை டிஆர்டிஓ கடந்த 16-ம் தேதி மேற்கொண்டது. இதற்காக கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஏரோனாடிக்கல் சோதனை மையத்தில் (ஏடிஆர்) இருந்து தபஸ் ஆளில்லா விமானம் புறப்பட்டது. வானில் மூன்றரை மணி நேரம் பறந்த பின்பு சித்ரதுர்காவில் உள்ள பரிசோதனை மையத்தில் தபஸ் ஆளில்லா விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
தபஸ் ஆளில்லா விமானம், எஸ்ஏஆர் என்ற ரேடாருடன் 30 ஆயிரம் அடி உயரத்தில், 24 மணி நேரம் பறக்கும் திறன் வாய்ந்தது. இதன் மூலம் நடுவானில் இருந்து 250 கி.மீ தூர பகுதியை கண்காணிக்க முடியும். பாதுகாப்பு படைகளின் உளவு மற்றும் கண்காணிப்பு பணிக்காக தபஸ் ஆளில்லா விமானம் தயாரிக்கப்பட்டது. இந்த விமானம் இஸ்ரேலின் ஹெரான் ஆளில்லா விமானத்துக்கு நிகரானது என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.