இந்தியாவில் யு பி ஐ பரிவர்த்தனைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1330 கோடி பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சூழலில், யுபிஐ வரவால் பொதுமக்களின் செலவிடும் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவில், யுபிஐ வருகைக்குப் பிறகு தேவைக்கு அதிகமாக பொதுமக்கள் செலவு செய்வது உறுதியாகியுள்ளது.
யுபிஐ வரவால் மக்களின் செலவிடும் போக்கு குறித்து வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். பொதுவாக, “நேரடியாக பணத்தை கையாள்வதை விட யுபிஐ மூலம் செலவழிப்பது பணத்தைப் பற்றிய குறைவான அறிதலை ஏற்படுத்துகிறது. இதனால், செலவுகளை முழுமையாக கண்காணிக்க முடிவதில்லை” என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஐஐடி டெல்லி மேற்கொண்ட ஆய்வில் 74% மக்கள் யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தொடங்கிய பிறகு தேவையானதை விட அதிகமாக செலவு செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.