நடப்பு ஆண்டில், இந்தியாவில் உள்ள சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் யுபிஐ பண பரிவர்த்தனை 650% உயர்ந்துள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பரிவர்த்தனை மதிப்பு 25 சதவீதமும், பரிவர்த்தனை எண்ணிக்கை 14 சதவீதமும் உயர்ந்துள்ளதாக பே நியர் பை (PayNearby) என்ற டிஜிட்டல் வங்கி தளம் தெரிவித்துள்ளது. மேலும், mPOS கருவிகளுக்கான தேவை 25% உயர்ந்துள்ளதாகவும், இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில், EMI வசூல் 200% வரை உயர்ந்துள்ளதாகவும், இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை உயர்ந்துள்ள சமயத்தில், வங்கிகளில் இருந்து ரூபாய் நோட்டுகளை பெறுவது குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, சராசரியாக 2620 ரூபாய் பணமாக எடுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2595 ரூபாய் மட்டுமே சராசரியாக எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பே நியர் பை நிறுவனத்தின் தோற்றுனர் ஆனந்த் குமார் பஜாஜ், இந்தியர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து வருவதை குறிக்கும் விதத்தில், பணப்பரிவர்த்தனை முறை, வங்கி செயல்பாடுகள் ஆகியவையும் டிஜிட்டல் முறையில் மேம்பட்டு வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.














