பஞ்சு இறக்குமதி வரி விலக்கு காலத்தை நீட்டிக்க தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ரஷ்யா-உக்ரைன் போர் எதிரொலியாக, வெளிநாடுகளில் இருந்து இந்திய ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் வருகை குறைந்துள்ளது. இதனால், நுால் வர்த்தகம் சரிந்து நுாற்பாலைகள் கடுமையாக பாதித்துள்ளன. வழக்கமாக ஓய்வின்றி இயங்கும் தமிழக நுாற்பாலைகள், 20 முதல் 30 சதவீத அளவிலேயே இயங்கி வருகின்றன. நூலுக்கான தேவை இல்லாததால், தீபாவளிக்கு பின் நூற்பாலைகள் மீண்டும் இயக்கத்தை துவக்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது.
உச்சம் தொட்ட பருத்தி பஞ்சு விலை, தற்போது இறங்கி வருகிறது. ஆனாலும் பஞ்சு வாங்க ஆளில்லாத நிலையே உள்ளது. ரஷ்யா -- உக்ரைன் போர் முடிவுக்கு வந்தால்தான் இந்திய ஜவுளித்துறையில் இயல்பு நிலை திரும்ப வாய்ப்பு உள்ளது. உள்நாட்டில் பஞ்சு விலை உயர்ந்ததை அடுத்து, மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் முதல் பஞ்சு இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்தது. இந்த விலக்கு காலம் அக்.31ம் தேதியுடன் முடிவடைகிறது.
அதிக நீளமுள்ள பருத்தி இழை ரகத்திற்கு இந்தியாவில் விளைச்சல் இல்லை. சில ரக பருத்தியை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, எகிப்து மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய கட்டாய நிலை உள்ளது. பஞ்சுக்கு 11 சதவீத இறக்குமதி வரியால் நுால் உற்பத்தி, ஆடை உற்பத்தி செலவு உயர்ந்துள்ளது. மத்திய அரசு பஞ்சு இறக்குமதி வரி விலக்கு காலத்தை 2023 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்று அவர் கூறினார்.