இந்தியாவில், வரும் அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, ஐ நா பாதுகாப்பு கவுன்சில் நடத்தும் தீவிரவாத எதிர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களை தீவிரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இதனை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பதை பற்றி விவாதிக்க இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. மும்பை மற்றும் டெல்லியில் இந்தக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கு பெறுவதற்காக அமெரிக்காவின் மூத்த தூதர் கிரிஸ் லூ இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நடைபெறும் ஐ நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்குபெற அவருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. அவரது வருகையின் போது, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிஸ் லூ, முதலில் இந்தியாவின் மும்பைக்கு வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, மும்பை தாஜ் ஹோட்டலில் நவம்பர் 26 ஆம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு நினைவஞ்சலி செலுத்துவார் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு, இந்திய மாணவர்களைச் சந்தித்து, ஜனநாயகம் குறித்த விவாதத்தில் ஈடுபடுவார் என செய்தி குறிப்பு வெளியாகி உள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவரது சந்திப்புகளில் உடன் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.