ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
காசா போர் தொடங்கியதில் இருந்தே மேற்கு ஆசியாவில் உள்ள பல்வேறு அமெரிக்க நிலைகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எனினும் அமெரிக்க தூதரகத்தில் தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த சம்பவம் குறித்து தூதரக செய்தி தொடர்பாளர் கூறியதாவது, நேற்று அதிகாலை அமெரிக்க தூதரகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏற்பட்ட சேதம் குறித்து மதிப்பிட்டு வருகிறோம். இதில் யாரும் காயம் அடையவில்லை என்றார்.
இதுகுறித்து ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் கூறும் போது காட்யுஷா வகையை சேர்ந்த 14 ஏவுகணைகள் சரமாரியாக வீசப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்ற போதிலும் ஈராக்கில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஆயுத குழுவினர் இந்த தாக்குதலை நடத்திருக்க கூடும் என்று கருதப்படுகிறது. பலத்த பாதுகாப்பு மிக்க முக்கிய மண்டலமான இந்த பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.