உக்ரைனுக்கு 6100 கோடி டாலர் ராணுவ நிதி உதவி அளிக்கும் மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றுள்ளார். இந்த உதவியை ரஷ்யா எதிர்த்துள்ளது. இந்த நிதி உதவி இன்னும் பேரழிவை கொண்டு வரும் என்றும், இதனால் போர் நீடித்து பல்லாயிரக்கணக்கானவர்கள் பலியாவார்கள் என்று ரஷ்யா எச்சரிக்கை செய்துள்ளது. அமெரிக்காவின் நிதி உதவி இல்லாமல் போரில் உக்ரைன் தோல்வி அடையும் என்று சமீபத்தில் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார். இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்க 9500 கோடி டாலர் நிதி தொகுப்பு மசோதாவை அமெரிக்க பிரதிநிதிகள் சபை சனிக்கிழமை அன்று நிறைவேற்றியது. அதன்படி உக்ரைனுக்கு 6100 கோடி டாலர் நிதி உதவி கிடைக்கும். ஆயுதங்கள் வாங்க 1380 கோடி டாலர் வழங்கப்படுகிறது. மேலும் பொருளாதார உதவியாக 900 கோடி டாலர் கடனாக அளிக்கப்பட உள்ளது.
இஸ்ரேலை ஆதரிக்கவும், காசாவிற்கு நிவாரண உதவிகள் வழங்கவும் சுமார் 2600 கோடி டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி அமெரிக்க செனட் சபையில் நாளை நிறைவேற்றப்பட உள்ளது. அதன் பிறகு அந்த மசோதாவில் அதிபர் பைடன் கையெழுத்திடுகிறார்.