ஈரான் ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணையில் தளவாடப் பிரச்சினை காரணமாக ஈரானுக்கு உதவி செய்ய முடியவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது.
ஈரான் அதிபர் இப்ராஹீம் ரேசி உட்பட 9 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான விசாரணையை ஈரான் அரசு தொடங்கியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில் மோசமான வானிலை நிலவியது. இதனால் இந்த விசாரணையில் உதவுமாறு அமெரிக்காவிடம் ஈரான் அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் அமெரிக்காவால் ஈரான் அரசுக்கு உதவ இயலவில்லை. தளவாட சிக்கல்கள் காரணமாக உதவி செய்ய இயலவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியிருப்பதாவது, தளவாடங்களை கொண்டு செல்வது போன்ற காரணங்களால் எங்களால் தற்போது உதவி செய்ய முடியவில்லை. ஈரானின் அதிபராக இப்ராஹீம் ரேசி கைகளில் ரத்தம் படிந்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் அடிப்படையான அணுகுமுறை மாறப்போவது கிடையாது. ஈரான் மக்களின் மனித உரிமைகள், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம். ஈரான் அரசாங்கத்தின் மீதான அமெரிக்காவின் தடைகள் தொடர்ந்து இருக்கும். மோசமான வானிலை நிலவிய இடத்தில் 45 ஆண்டுகால ஹெலிகாப்டரை பயன்படுத்தியது ஈரான் அரசாங்கம் தான். எனவே இந்த முடிவிற்கு அரசாங்கம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார்.