நீருக்கடியில் 100 நாட்கள் வசித்து புதிய சாதனை படைப்பதை நோக்கி அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் செயல்பட்டு வருகிறார். ஜோ திட்டூரி என்ற பேராசிரியர், பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர். மேலும், அவர் அமெரிக்க கடற்படையின் முன்னாள் வீரர் ஆவார். கடந்த மார்ச் 1ம் தேதி முதல், அவர் நீருக்கு அடியில் வசித்து வருகிறார். இதற்காக, ஜுல்ஸ் அண்டர்சீ லாட்ஜ் - ல், சுமார் 30 அடி ஆழத்தில் 100 சதுரடி வாழ்விடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு, 2 பேராசிரியர்கள் நீருக்கடியில் 73 நாட்கள் வசித்து உலக சாதனை படைத்திருந்தனர். அவர்களது சாதனையை ஜோ முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீருக்கடியில், மிகவும் ஆழமான பகுதிக்கு செல்ல செல்ல, அழுத்தம் அதிகமாகும். அத்தகைய அழுத்தமான சூழலில் ஜோ வசித்து வருகிறார். அழுத்தமான சூழலில் நெடுநாட்கள் இருந்தால், உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஐந்தே நாட்களில் அழுத்தமான சூழலை எதிர்கொள்ளும் செல்களின் எண்ணிக்கை இரு மடங்காகும் என்று முந்தைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தற்போது ஜோ நீண்ட நாட்களுக்கு தங்க உள்ளதால், ஒருவேளை நீருக்கு அடியில் உள்ள உயர் அழுத்தம் மனிதர்களுக்கு வயதாவதை தடுக்கலாம் என்ற கோணத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், நீருக்கடியில் வாழும் அறியப்படாத விலங்குகளின் மூலம், பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியும் என்பது குறித்தும் இவரது 100 நாட்கள் இறுதியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.