வடகிழக்கு பருவமழை தொடர்வதால் வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் 70 அடியாக உயர்ந்துள்ளது.
வைகை அணை இந்த ஆண்டில் ஏற்கனவே இருமுறை முழுக்கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணைக்கு வரும் தண்ணீரின் அளவு உயர்ந்தது. இதன் காரணமாக 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று காலை மீண்டும் 70 அடியாக உயர்ந்தது.
இதையடுத்து வைகை அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரிநீராக திறந்து விடப்படுகிறது. இதன்படி வினாடிக்கு 2,320 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், திறக்கப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த ஆற்றங்கரையோர மக்கள் வைகை ஆற்றில் இறங்கவோ, கடந்து செல்லவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.