பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், வந்தே பாரத் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படுகின்றன.
நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில்கள் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அதிவேக பயணம் மற்றும் விமானத்துக்கு ஒத்த கட்டமைப்பு காரணமாக பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்டிகள் குறைவாக இருப்பதால் டிக்கெட்டுகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனை கவனத்தில் கொண்டு, ரெயில்வே வாரியம் 7 வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகளுடன் ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. மங்களூர் சென்ட்ரல்-திருவனந்தபுரம் சென்ட்ரல், செகந்திராபாத்-திருப்பதி, சென்னை எழும்பூர்-நெல்லை வழித்தடங்களில் 16 பெட்டிகளுடன் இயங்கும் ரெயில்கள் 20 பெட்டியாக அதிகரிக்கப்படுகின்றன. மதுரை-பெங்களூரு கான்ட், தியோகர்-வாரணாசி, ஹவுரா-ரூர்கேலா, இந்தூர்-நாக்பூர் வழித்தடங்களில் 8 பெட்டிகளுடன் இயங்கும் ரெயில்கள் 16 பெட்டியாகும் என ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.














