அணில் அகர்வால் தலைமையில் இயங்கி வரும் வேதாந்தா குழுமம், ஸ்டீல் வணிகத்தை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சுரங்கம் மற்றும் தொழில் துறையில் கவனம் செலுத்த உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாத அறிக்கையின்படி, வேதாந்தா குழுமம் 11.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனில் உள்ளது. அதனை ஈடுகட்ட, ஸ்டீல் துறையை விற்கவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, டாடா ஸ்டீல், நிப்பான் ஸ்டீல், ஜே எஸ் டபிள்யூ, ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட பல நிறுவனங்களை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இது பற்றி கருத்து தெரிவிக்க எந்த நிறுவனங்களும் முன்வரவில்லை. முன்னதாக, கடந்த 2018 ஆம் ஆண்டு, டாடா ஸ்டீல் நிறுவனத்தை விட வேதாந்த நிறுவனம் ஸ்டீல் துறையில் முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.














